Tamilnadu : கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் தொடர்மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகப் பெய்துவரும் கனமழையாலும், முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்காலும் பல்வேறு ஊர்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களும், காய்கறிகளும் மழை, வெள்ளத்தில் மூழ்கிச் சேதமடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கனமழையால் ஆடு மாடு கோழி ஆகிய கால்நடைகளும் உயிரிழந்திருப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியதைத் தெரிவித்துள்ளார்.

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஆற்றங்கரையோரம் வசிப்போரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், பாதிப்புகளை உடனடியாகக் கண
க்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *