
நீட் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிக்கும்படி மக்களவை சபாநாயகருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், தொடர்ந்து 20 மசோதாக்கள் வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதி;ல், ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகளின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அவர், ஜனநாயகத்தில் தீர்வு காண்பதற்கான ஒரே வழி, பேச்சுவார்த்தையும் விவாதமுமே ஆகும் என்றும், அதனால், நீங்கள் எதிர்க்கட்சியினருடன் தயவுசெய்து ஆலோசனை மேற்கொள்ளுங்கள் என்றும், ஒவ்வொருவரின் ஒப்புதலை பெற்று, விவாதத்திற்கு தேவையான அளவிற்கு காலநேரம் ஒதுக்குங்கள் என்றும், இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளிக்கிறேன் என்றும் கடிதத்தி;ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



