Ration Shop: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Advertisements

ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாமெனத் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகப் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2024 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜூன் 2024 மாத உரிம அளவு பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 மாதத்தில் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பெற்றுள்ளனர்.

கூடுதல் நகர்வு காரணமாக ஜூலை 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாமென நடைபெற்று வரும் 2024-2025-க்கான மானியக் கோரிக்கையின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஆகஸ்ட் 2024 மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டும் ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜூலை மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை உடனடியாகப் பெறும் வகையிலும் ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பெற முடியாத அட்டைதாரர்களுக்கு ஜூலையில் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *