
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் பணிகளை பல்வேறு வியூகங்கள் அமைத்து செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் நடை பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், இன்று வெள்ளிக்கிழமை முதல் 14-ந்தேதி சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்பட இருக்கின்றது.
இன்று மதியம் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.விருப்ப மனு பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதுமட்டுமில்லாமல் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கும் இன்று முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் 23 தொகுதிகள் காரைக்காலில் 5 தொகுதிகள், மாகி-1, ஏனாம்-1 ஆகிய 30 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கும் இன்று முதல் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திலேயே விருப்ப மனு வழங்கப்பட இருக்கின்றது.இன்று 06-02-2026 மதியம் 12 மணிக்கு மேல் மாலை 6 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.
வருகிற 14-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்..இது தமிழக வெற்றி கழகம் சார்பில் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் போட்டயிட இருக்கும் வேட்பாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது விருப்ப மனு தாக்கல் முடிந்த பிறகு எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.



