சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துடன் தொடா்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கா்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

