
விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழலில், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்காததே இதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த தி.மு.க ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடியும் விஜய்யும் சரமாரியாகக் குற்றம்சாட்டி வந்தனர். தேர்தல் முடிவில் தி.மு.க ஆட்சி ஓரங்கட்டப்பட்டு, விஜய் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல இப்போதும் குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இது குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிய அரசு தங்களுக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை அந்தந்த துறைகளில் நியமிப்பது வழக்கமான நடைமுறை. அந்த வகையில், உளவுத் துறையில் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருந்துவந்த ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி-க்கள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
மற்றபடி காவல் துறையில் முக்கியப் பதவிகளாகக் கருதப்படும் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்டவர்களே இன்னமும் தொடர்கிறார்கள். சட்டம்-ஒழுங்கைச் சிறப்பாகக் கையாளும் திறமையான அதிகாரிகள் புதிதாக நியமிக்கப் படாததே, தற்போதைய த.வெ.க ஆட்சியில் தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறிவருவதற்கு முக்கியக் காரணம்.
அதாவது, கடந்த தி.மு.க ஆட்சியின்போது அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களே இன்னமும் தொடர்கிறார்கள். உளவுத்துறைக்கு மட்டும் புதிதாக அதிகாரிகளை நியமித்துவிட்டதால், சட்டம்- ஒழுங்கு சரியாகிவிடும் எனக் கருதுவது மாபெரும் தவறு. சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும்கூட சரியான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ரவுடிகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் முழுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் புதிய அரசு கவனம் செலுத்துவது நல்ல நடவடிக்கைதான். ஆனால், குற்றங்களைத் தடுக்க இது மட்டுமே போதாது என்றனர். இது குறித்து உளவுத்துறை போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே அதைக் கண்டுபிடித்து, நாங்கள் முன்கூட்டியே அலர்ட் கொடுத்தாலும், அதைச் செயல்படுத்துவதென்பது லோக்கல் சட்டம்-ஒழுங்கு போலீஸ்தான்.
இந்த நிலையில் புதிய ஆட்சியில் நாம் எப்படி பவர்புல் பதவிகளைப் பெறுவது என்பதிலேயே சில அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்றொரு பிரிவினரோ, ‘எப்படியும் நம்மை இடமாற்றம் செய்துவிடுவார்கள்’ என்ற விரக்தி மனநிலையில் இருக்கிறார்கள்.
போலீஸ் கமிஷனர், மண்டல ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி பதவிகளைத் திறமையானவர்களின் கையில் ஒப்படைத்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், கடந்த ஆட்சிகளில் சிபாரிசின் பெயரில் முக்கியப் பதவிகளைப் பெற்ற சிலர், இப்போதும் உயர் பதவிகளைப் பிடிக்க புதிய ரூட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் அதிக எண்ணிக்கையில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முக்கியமான சட்டம்-ஒழுங்கு பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் இடமாறுதலுக்குப் பிறகு சட்டம்-ஒழுங்கு பிரச்னை சரியாகிவிடும். தற்போது நடந்திருக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்களின் பின்னணிகளை ஆய்வுசெய்துவருகிறோம். விரைவில் அவையெல்லாம் நடக்காமல் தடுக்கப்படும்” என்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை உயதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஓரிரு குற்றச் சம்பவங்கள் நடந்தாலும் அவற்றை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கமானதுதான்.
புதிய ஆட்சி அமைந்து சில நாட்களே ஆகின்றன. அமைச்சரவைகூட இன்னும் முழுமையாக நிரப்பப்படாத சூழல் நிலவுகிறது. எனவே, ஆளுங்கட்சிக்கு உரிய கால அவகாசத்தை முதலில் கொடுக்க வேண்டும். குறிப்பாக, காவல்துறையில் புதிய அதிகாரிகளை நியமித்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர சில காலம் ஆகும். அதன் பின்பும், இதே நிலை தொடர்ந்தால், அப்போது விமர்சிக்கலாம்.
சென்னை படப்பை பகுதியில் சீனிவாசன், பரத்குமார் இருவரும் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்விரோதம் இருக்கிறது. அம்பத்தூர் பகுதியில் மூதாட்டி பொன்னம்மாளைக் கொலைசெய்து, கொள்ளையடித்த வழக்கும் தனிநபர் பிரச்னை என்பது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திலும் உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.
கோவையில் நடந்த சிறுவன் கொலை வழக்குக்குக்கூட சிறுவர்களிடையே நடந்த சண்டையே பின்னணி காரணம். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் மே 20ம் தேதி மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் திடீரென காணாமல் போன அச்சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையி்ல், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து உடற்கூராய்வு முடிவிலேயே உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சிறுமியின் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை எல்லாவற்றிக்கும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனச் சொல்வதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனர். ஜெயலலிதாவை இன்னும் மக்கள் விரும்புவது சட்டஒழுங்கு பிரச்னையில் சமரசம் செய்யாமல் வெட்டு ஒண்ணு துட்டு ஒண்ணு என்று நடவ்க்கை எடுப்பார். அதேபோல் முதல்வர் விஜய்யும் நடந்ததால்தான் முடியும் .
இல்லையென்றால் முன்னாள் முதர்வர் ஸ்டாலினுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான் விஜய்யிக்கும் எதிர்க்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்…



