
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்குத் தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஜூலை 9) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருக்கு ஜூலை 14 முதல் செப்டம்பர் 1 வரை செவ்வாய்கிழமைகளில் மதியம் 2 மணிக்குச் சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும். அதேபோல், மங்களூரில் இருந்து ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 31 வரை திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்குக் கிளம்பும் ரெயில் (06126), மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் வழியாகச் செல்லும்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து கொல்லத்திற்கு ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 2 வரை புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்குச் சிறப்பு ரெயில் (06119) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்குக் கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்குக் கிளம்பும் ரெயில், மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும். 16 ஏ.சி. பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 2 வரை புதன்கிழமைகளில் மாலை 3.45 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரெயில் (06110), மறுநாள் காலை 10 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை வியாழக்கிழமைகளில் மதியம் 2 மணிக்குக் கிளம்பும் ரெயில் (06109), மறுநாள் காலை 7.15 மணிக்குத் திருவனந்தபுரத்தைச் சென்றடையும். இந்த ரெயில் செங்கோட்டை, தென்காசி, மதுரை, திருச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரம் வழியாகச் செல்லும்.


