
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திற்குப் பரந்து விரிந்த இந்தச் சேமிப்பு மையத்தில் மொத்தம் 27 ஆயிரம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையால் நனையாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்த நெல் மூட்டைகள், அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்படும்.
இந்நிலையில், நேற்றுக் காலை சுமார் 10 மணி அளவில், சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் இருந்து புகை வந்ததைக் காவலாளி கவனித்தார். உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பலத்த காற்று வீசியதால், தீ மளமளவெனப் பரவி அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளிலும் பற்றியது.
தகவலறிந்ததும் ஆலங்குளம், சுரண்டை, தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் தீப்பற்றிய நெல் மூட்டைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயை அணைக்கும்போது அதிகளவில் தண்ணீர் பாய்த்ததால், தீப்பிடிக்காத பல நெல் மூட்டைகளும் தண்ணீரில் நனைந்து போனதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்தில் தீயில் எரிந்தும், தண்ணீரில் நனைந்தும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
மின்கசிவு, தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றால் தீப்பிடித்ததா? அல்லது யாரேனும் திட்டமிட்டுத் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் கடையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து நேர்ந்த இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் தீயில் சேதமடைந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தவெக மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தியும் சென்றிருந்தார்.



