
த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ₹35 கோடி லஞ்சம் கொடுத்து குதிரை பேரம் நடத்தியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் அவர்கள் தலைமறைவாக இருந்ததால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, குதிரை பேரத்திற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
மறுபுறம், கிண்டி மற்றும் ஈ.சி.ஆர் ஓட்டல்களில் சதி ஆலோசனை நடந்ததற்கும், சிசிடிவி ஆதாரங்களை அழித்ததற்கும் அரசு தரப்பில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
இந்த உத்தரவின்படி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



