ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் இருந்த ரூ.2.60 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (43). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ் சப்ளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.2.60 லட்சம் பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டியின் இருக்கைக்கு அடியில் வைத்தார். இன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வாகனத்தின் இருக்கை உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.60 லட்சம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.