
புளியங்குடி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42). இவர் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பாகத் தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவருடன் சேர்ந்து அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (44) என்ற போலீஸ்காரரும் சைலேசுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணுக்குப் பாலி யல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக இளம்பெண், சிவகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.தொடர்ந்து அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்தார்.
அதன்படி 2 போலீஸ்காரர்கள்மீதும் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்ததால் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து புகாருக்கு உள்ளான 2 பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே தற்போது ஆலங்குளம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சைலேசுக்கும், சிவகிரியில் பணியாற்றி வரும் செந்திலுக்கும் இந்தத் தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களைக் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேசை கைது செய்தனர்.
கைதான சைலேசை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள செந்திலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதனிடையே தன் மீது பொய் வழக்கு போட்டு உயர் அதிகாரிகள் தன்னை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாகச் சைலேஷ் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
