அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்!

Advertisements

சென்னை:

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.

துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இதையொட்டி சமீபத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி அமலாக்கத்துறை வட்டாரத்தில் நேற்று தகவல் வெளியானது.

இதற்கிடையே கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜரானார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *