
ஊட்டி:
சுற்றுலா தலமான நீலகிரிக்கு தினந்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
இயற்கை சூழலைப் பாதுகாக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களைச் சாலையோரம் வீசிச் செல்கின்றனர்.
இன்னும் சில சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வாங்கி வந்த மதுவை குடித்து விட்டு, காலிபாட்டிலை சாலையோரம் வீசிச் செல்கிறார்கள்.
முதுமலை, மசினகுடி, மாவநல்லா, குன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் அதிகளவில் கிடக்கிறது.
இதனால் வனவிலங்குகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் வனத்தை விட்டு வெளியே தாயுடன் வந்த குட்டி யானை சாலையோரத்தில் சுற்றி திரிந்தது.
அப்போது குட்டி யானை சாலையோரம் கிடந்த மதுபாட்டிலை தனது துதிக்கையால் எடுத்து வாயிலுக்குள் திணிக்க முயற்சிக்கிறது. இதனை அவ்வழியாகச் சென்றவர் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சாலையோரம் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
