சசிகலா – ராமதாஸ் – கிருஷ்ணசாமியால் பெரிய சிக்கல்..! எடப்பாடிக்கு வார்னிங்..

Advertisements

எப்படியாவது திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நினைத்து பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலா, ராமதாஸ், கிருஷ்ணசாமி ஆகியோரின் வியூகம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நாளை தான் பிரசாரத்துக்கு கடைசி நாள். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடைபெற உள்ள தேர்தலில் திமுகவை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.

இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்துள்ளது. இதனால் எதிர்ப்பு அலை இருக்கும். அதனை சாதகமாக்கி வென்று விடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் கனவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர் மூன்று பேர். அவர்கள் தான் சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி. இதில் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியதால் அவர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இதனால் சமீபத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி பாமக நிறுவனர் ராமதாசுடனும் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியில் சசிகலா 75 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இதில் சுமார் 50 சதவீதம் பேர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேவர் சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் எல்லாம் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்.

இதனால் தேவர் சமுதாய ஓட்டுகளை சசிகலா பிரிப்பது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் மகன் அன்புமணியுடனான பிரச்சனையால் தனி அணியாக ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். இவர் வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் உள்ள 37 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மருமகளான சவுமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.

அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக உள்ளது. இதனால் ராமதாஸ் வேட்பாளர்கள் பிரிக்கும் ஒவ்வொருஓட்டுகளும் அதிமுக கூட்டணி மற்றும் அன்புமணியின் பாமகவினருக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கே கிருஷ்ணசாமி மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர். இவருக்கு தென்மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. தற்போது அவரும் அதிமுகவை தான் குறிவைத்து அடித்து வருகிறார். இதனால் அவரும் அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போதைய தேர்தல் வழக்கத்தை விட வித்தியாசமாக உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அவரது வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு வாக்குகளை பிரிப்பார்கள்.

இதனால் வெற்றி பெறும் வேட்பாளருக்கும், 2ம் இடம் பிடிக்கும் வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் குறையலாம். இதனால் ஒவ்வொரு வாக்குகள் முக்கியம். தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்லக்கூடிய சுமார் 1,000 முதல் 3,000 வாக்குகளை சசிகலா, ராமதாஸ், கிருஷ்ணசாமியின் வேட்பாளர்கள் பெற்றால் கூட அது அதிமுக, பாமக வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் கடந்த 2021ல் 25 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 3,000 வாக்குகளுக்கும் குறைவாகவே இருந்தது. 4 முனை போட்டியால் இந்த முறை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் ராமதாஸ், சசிகலாவின் மூவ் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன்மூலமாக வரும் சட்டசபை தேர்தலில் சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரால் எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் அரியணை கனவுக்கு சிக்கல் வரலாம் என வார்னிங் செய்துள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *