
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே திறந்த வெளியில் உட்கார்ந்து கொண்டு முட்டை குருமா, வெஜ் பிரியாணியை சாப்பிட்டதாகக் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்களைப் போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
திருமலையில் பக்தர்கள் அசைவ உணவுகள், மதுபானங்கள், பீடி, போதை வஸ்துகள், பான் பராக், குட்கா, சிகரெட், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் உள்ளிட்டோரை அலிபிரி செக் போஸ்ட்டில் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்த பிறகே அவர்களை அனுமதிக்கிறார்கள்.
அவர்கள் கொண்டு வரும் லக்கேஜுகளும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதற்காகப் பேருந்துகளில் செல்வோர் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் சோதனை செய்யும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
அதுவரை பேருந்து அவர்களுக்காகக் காத்திருக்கும். சோதனைகளை முடித்துக் கொண்டு அவரவர் வந்த பேருந்தில் ஏறி மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஒரு வேளை அந்தச் சோதனையில் பீடி, சிகரெட், மதுபாட்டில் உள்ளிட்டவை இருந்தாலும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள்.
இந்த நிலையில் திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகே உள்ள ராம்பகீச்சா (Ram Bageecha) பேருந்து நிலையம் அருகே திறந்தவெளியில் அமர்ந்து அசைவ உணவுகளைப் பக்தர்கள் 28 பேர் கும்பலாகச் சாப்பிடுவதாக அங்கிருந்த சக பக்தர்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வந்த போலீஸார் சோதனை செய்தபோது அவர்கள் முட்டை குருமா, வெஜ் பிரியாணி உள்ளிட்டவைகளை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அவர்களை விசாரித்தபோது திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் எனத் தெரியவந்தது. திருமலையில் அசைவ உணவுகளுக்குத் தடை இருப்பது தங்களுக்கு தெரியாது என அவர்கள் கூறினர்.
இதையடுத்து கண்காணிப்பு அதிகாரிகள் இனி இப்படி தடை செய்யப்பட்ட உணவைக் கொண்டு வரக் கூடாது என அவர்களை எச்சரித்தனர். எனினும் அலிபிரி செக் போஸ்ட்டில் சோதனையைத் தாண்டி இது எப்படி உள்ளே வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
