
பீகார் மாடலைத் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் பா.ஜ.க. முயல்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பீகாரில், நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி அப்பதவியில் நியமிக்கப்பட்டார் என்று கூறினார்.
நிதிஷ் குமாரின் கடந்தகாலச் செயல்களை வைத்து பா.ஜ.க. அவரை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று விமர்சித்தார். பீகார் மாடலைத் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வில் தமிழ் மக்களைப் பாதுகாத்த சிறந்த தலைவர்கள் இருந்த நிலையில் தற்போது அக்கட்சியில் மக்களுக்கு சேவை செய்ய யாரும் இல்லை என்று குறிப்பிட்டார். அ.தி.மு.க. தலைவர்கள் தங்கள் ஊழலால் சமரசம் செய்துள்ளனர் என்றும் அவர்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் நுழைய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க.வை கட்டுப்படுத்துபவர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியால் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.


