NIA Raid: வங்கதேச நபர்கள் 3 பேர் கைது !

Advertisements

படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்காள தேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீசார் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஏன்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்காள தேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைபோல மறைமலைநகர் பகுதியில் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போலி ஆதார் அட்டை மூலம் பணிபுரியும் தொழிலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *