Vaniyambadii : மழையால் ஸ்தம்பித்த போக்குவரத்து – அவதிப்படும் வாகன ஓட்டிகள்.!

Advertisements

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.

வாணியம்பாடி நகரப் பகுதிகள், நியூ டவுன், பஸ் நிலையம், கச்சேரி சாலை, ஆலங்காயம் சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்த இந்த கனமழையினால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.. நகரின் முக்கியச் சாலைகளில் முறையான வடிகால் வசதி இல்லாததன் காரணமாக, மழைநீருடன் நகராட்சி கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக ஜீவா நகர், ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு சாக்கடை நீருடன் கலந்த மழைநீர் சூழ்ந்ததால், அந்த வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதடைந்து நின்றன. இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

திடீரென பெய்த இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், ஒரு மணி நேர மழையிலேயே நகரின் முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களுக்கு முன்பாகவே வடிகால்களைத் தூர்வாரி, கழிவுநீர் சாலைகளில் வழிந்து ஓடுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *