
மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பது நேற்று தான் தெரியுமா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடியை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பதும் உங்களுக்கு நேற்று தான் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், வருடந்தோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வைக் கூட முன்கூட்டியே ஆய்வு செய்து, திட்டமிட முடியாதளவிற்கு ரீல்ஸ் எடுப்பதில் படு பிஸியாகிவிட்டீர்களோ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட வேண்டிய தேதியன்று, நீர் குறைவாக உள்ளது அதனால் சிறப்புத் தொகுப்பு கொடுக்கிறோம் என்று கதை சொல்கிறீர்களே, உங்கள் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் என்றைக்கு செயல்பாட்டிற்கு வருவது, டெல்டா விவசாயிகள் எப்பொழுது தங்கள் நடவை ஆரம்பிப்பது, மழைநீரும் அல்லாமல், அணை நீரும் தராமல் வெறும் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு மட்டுமே லட்சக்கணக்கான விளைநிலங்களில் பாசனம் செய்ய முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை, முதலில் நீங்கள் ஆராய்ந்தீர்களா என்றும் நயினார்நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
மேலும் முறையான ஆய்வுக் குழுவை அமைத்து இப்பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் அணுகுவதோடு, முதலமைச்சரின் நிர்வாக அலட்சியத்தால், பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை, ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


