Medicos Suicide: பேராசிரியருக்கு ஆண்மை பரிசோதனை!

Advertisements

குலசேகரம்  மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுகிர்தா, முதுகலை படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

Advertisements

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் தான் காரணம் என சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. மேலும் பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஹரீசுக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, ஹரீஷ் தூத்துக்குடியில் இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில் பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்காகவும் ஜாமின் மனு விசாரணைக்காகவும் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் நேற்று நாகர்கோவில் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பேராசிரியர் பரமசிவத்துக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவரது ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவம், மீண்டும் பாளை அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *