
மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா!
சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான சுவையைக் கொண்ட சமையலை செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு மதுரை ஸ்டைல் சமையல் பிடிக்குமா? அப்படியானால் மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னாவை முயற்சி செய்யுங்கள். இந்தச் சிக்கன் சால்னா இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு – துருவிய தேங்காய் – 1/4 கப்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய் – 3
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 8 பல்
சிக்கன் – 1/2 கிலோ
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
புதினா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வேர்க்கடலை, சோம்பு, சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், சுவையான மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா தயார்.

