அவதூறு கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இந்த வழக்கு வருகின்ற 20.12.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தலித் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் பதினொன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையும், பிணை மனு மீதான விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அருந்ததியர் சமுதாயத்தினர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினார். ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சீமானின் வழக்கு வருகின்ற 20.12.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.