
காவிரி நீர்த் தகராறு தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக ஆகஸ்டு மூன்றாம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகத்துக்குச் செல்லவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதிகளில் குறுவை நெல் பயிரிடுவதற்காக வழக்கமாக ஜூன் 12ஆம் நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறந்துவிடவில்லை. கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் விடுவிக்க வேண்டிய பங்குத் தண்ணீர் விடுவிக்கப்படவில்லை.
அதேபோலக் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னுமிடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டுக்குக் கொஞ்சங்கூடத் தண்ணீர் கிடைக்காது என்பதால் தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பாசனத்துக்காகத் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் காவிரி நீர்ச் சிக்கல் பற்றியும், மேகேதாட்டு அணை கட்டுவது பற்றியும் விவாதிக்கக் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்டு மூன்றாம் நாள் கர்நாடகத்துக்குச் செல்ல இருக்கிறார் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஆகஸ்டு மூன்றாம் நாள் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய பங்குத் தண்ணீரைத் திறக்க வலியுறுத்துவார் என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.



