மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பிரார்த்தனை மற்றும் பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் காந்தியின் கொள்கைகளை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் அடையாளமாக மகாத்மா காந்தியின் வாழ்க்கை திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காந்தியின் கொள்கைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து விளங்கும் என்றும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். எல்லா உயிர்களிடமும் பகையற்ற தன்மையுடன், நட்பு மற்றும் கருணையுடன் இருப்பது, ‘எனது’ என்ற பற்றையும் அகந்தையையும் தவிர்ப்பது, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுவது, பொறுமையுடன் இருப்பது உள்ளிட்ட பண்புகளையும் பிரதமர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

