தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அனைத்து வகையான அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போதைய கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் பயன்பெற பெண்களுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல், ஒரு நாளில் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் படிப்படியாக பிற அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது.
தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
‘வெற்றிப் பயணம்’ திட்டம் நடைமுறைக்கு வந்ததும், மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலம் மொத்தம் 12,695 அரசு பேருந்துகள் இத்திட்டத்தில் இணைக்கப்படுகின்றன.
தமிழகத்தின் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் மொத்தம் 18,413 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 12,695 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், தினசரி இயக்கப்படும் மொத்த பேருந்து நடைகளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களான இ.டி.எம்.களுடன் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 27-ம் தேதி சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் கூடுதல் அரசு பேருந்து சேவைகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.


