உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வருகின்ற 18-ஆம் தேதி தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைத் தமிழக அமைச்சர்கள் சந்தித்து மனு அளிப்பது மட்டும் போதாது என்று தெரிவித்தார்.
எனவே இவ்விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்நாடக மாநில முதலமைச்சர் தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் உண்மையாக இருந்தால் முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


