
கரீபியன் தீவுநாடான டிரினிடாட் டொபக்கோவுக்குச் சென்று பிரதமர் மோடி பேச்சு நடத்தியதை அடுத்து அந்நாட்டுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.
மேற்கிந்தியத் தீவுநாடான டிரினிடாட் டொபக்கோவுக்குச் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினில் அந்நாட்டுப் பிரதமர் கமலா பிரசாத்துடன் பேச்சு நடத்தினார். அப்போது பணப் பரிமாற்றத்துக்கான இந்தியாவின் யுபிஐ தளத்தை அந்நாட்டு மக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இதேபோல ஆதார், டிஜிலாக்கர் ஆகியவற்றையும் டிரினிடாட் டொபக்கோ பொதுமக்கள் பயன்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அந்நாட்டுப் பிரதமர் கமலா பிரசாத் நன்றி தெரிவித்தார்.
அந்நாட்டுச் சிறார்களுக்கு இந்தியாவின் சார்பில் இரண்டாயிரம் மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
மேற்கிந்தியப் பல்கலைக்கழகத்தில் இந்தி பற்றியும், இந்தியவியல் பற்றியும் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள இரண்டு ஆய்விருக்கைகளை மீண்டும் நிறுவ உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.
அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பண்பாட்டுப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது.
