
கோவையில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கோவை காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் பல்வேறு புதிய வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
அதன்பின் பூங்காவில் நடந்து சென்று அதன் அழகை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்தப் பூங்காவில் விலங்குகள், உயிரினங்களின் உருவச் சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள போன்சாய் தாவரங்களும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவைப் பார்க்க வரும் மக்கள் ஆயிரம் இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவு வசதி செய்யப்பட்டுள்ளது.



