இராஜஸ்தானில் மோடி – விமான நிலையம் மற்றும் பெட்ரோலிய ஆலைத் திறப்பு!

இராஜஸ்தானில் ஜோத்பூர் விமான நிலைய முனையக் கட்டடம், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணி நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதேபோல் திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அப்போது அவருடன் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மாவும் உடனிருந்தார்.

 

ஜோத்பூர் விமான நிலையத்தின் முனையக் கட்டடம் 480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 20 இலட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையக் கட்டடத்தைத் திறந்த பின் பிரதமர் மோடி அங்கிருந்து பாலோத்ரா என்னும் ஊருக்குப் பயணம் மேற்கொண்டார். அங்குப் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி முடித்த பணியாளர்களுடன் நின்று பிரதமர் நரேந்திர மோடி படம்பிடித்துக்கொண்டார். எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார்.

பாலோத்ராவில் எண்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், இராஜஸ்தான் மாநில அரசும் கூட்டாக இணைந்து கட்டியுள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இது ஆண்டுக்கு 90 இலட்சம் டன் பெட்ரோலியம் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாகும்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *