ஐந்நூறு ஆண்டு கால தியாகத்தீபத்தால் ஏற்றிய கொடி – மோடி பேச்சு.!

ஐந்நூறு ஆண்டுகளாக ஏற்றிவைத்த தியாகத்தீபத்தால் கோவில் கட்டி முடிக்கப்பட்டுக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அயோத்தி இராமர் கோவிலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாலஇராமர் சிலை, காவிக்கொடி அடங்கிய பரிசை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இராமர் கோவில் கட்டுவதற்கு ஏராளமானோர் கனவு கண்டதாகவும், ஏராளமானோர் முயன்றதாகவும், எண்ணற்றோர் உயிர்த்தியாகம் செய்ததாகவும் கூறினார். அவர்களின் கனவுகளும் எண்ணங்களும் இன்று நனவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் தலைமுறைகளும் அரசுகளும் மாறிக்கொண்டே வந்துள்ளதாகவும், கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை என்றும் தெரிவித்தார். கோவில் கட்டப்பட்டுப் பால இராமர் உருவச் சிலை அமைக்கப்பட்டுக் கொடிமரமும் நாட்டப்பட்டுக் கொடியேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

கோவிலில் ஏற்றப்பட்டுள்ள காவிக்கொடி ஒருமைப்பாடு, உண்மை, நீதி ஆகியவற்றைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இராமர் கோவிலில் உள்ள கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டதால் அது இராமரின் ஆற்றலைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இது இராமபக்தர்களுக்கு மன நிறைவை அளித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக இருந்த புண்ணும் வலியும் இன்று மாறியுள்ளதாகத் தெரிவித்தார். ஐந்நூறு ஆண்டுகளாக ஏற்றிவைத்த தியாகத்தீபத்தால் கோவில் கட்டி முடிக்கப்பட்டுக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இராமர் கோவில் கொடிக்கம்பம் இந்திய நாகரிகத்துக்குப் புத்துயிரூட்டியதன் அடையாளம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *