
மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் கனமழையால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை, ராய்காட், பால்கர், தானே ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு முதல் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றுக் காலை எட்டு மணி முதல் இன்று காலை எட்டு மணி வரையான 24 மணி நேரத்தில் 14 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையால் சான்பாடா சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் நீந்தியபடி வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன.
மும்பை கோட்டைப் பகுதியிலும் இடைவிடாமல் கனமழை பெய்ததால் காலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாந்த்ரா கிழக்குப் பகுதியில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் குறைவாகக் காணப்பட்டது. அதே நேரத்தில் ரயில்களில் பயணிகள் போக்குவரத்து வழக்கம்போல் காணப்பட்டது.
மும்பை புறநகர்ப் பகுதியான வசாயிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மழைநீர் பாய்ந்தோடுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கனமழையால் நவிமும்பையில் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுவால் நடத்தப்படும் காய்கறிச் சந்தைப் பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
விடுமுறை நாளில் மும்பை மக்கள் பலர் இந்தியாவின் நுழைவாயில் பகுதியில் குடையுடன் நடந்து சென்று பருவமழைக் காலத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.
குஜராத்தின் வடபகுதிகளுக்கும் தென்மேற்குப் பருவக்காற்று முன்னேறியுள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்தப் பருவத்தின் முதல் மழை பெய்தது. இதனால் தனேரா நகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
குஜராத்தின் ஜுனாகத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களில் சிக்கித் தத்தளித்த மக்களைத் தீயணைப்புத் துறையினர் மிதவைகளுடன் சென்று கயிறு கட்டி மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.
ஜுனாகத் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஆறுகளில் கரைமீறிப் பாயும் வெள்ளம் நெடுஞ்சாலையில் பாய்ந்து செல்கிறது.


