“தவெகவினர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்” – ஆளுநரிடம் புகாரளித்த பாஜக!

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக ஆளுநரிடம்  மனு அளித்துள்ளதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அவர் ஆளுநரிடம் மனு அளித்தார். இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெண் குழந்தைகளிடம் அமைச்சர் விஸ்வநாதன் நடந்த விதம் தவறு என எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்து 54 நாட்களில் சட்டம், ஒழுங்கு கடுமையாகச் சீரழிந்துள்ளது என்றும், தவெகவினரே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். தவெக அரசைக் கலையுங்கள் என ஆளுநரிடம் கூறவில்லை என்றும், ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

 

திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 

ஆளுநர் எங்கெங்கு ஆய்வு செய்ய வேண்டுமென்று அமைச்சர் நிர்மல் குமார் கூற முடியாது என்றும் அவருக்கு ஆய்வு செய்ய முழு அதிகாரம் உள்ளது என்றும் நாகேந்திரன் கூறினார். தவெக அரசு குதிரைப் பேரம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *