Mettur dam:காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

Advertisements

கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 46 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர்:கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகக் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகக் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒகேனக்கலில் தொடர்ந்து 11 ஆவது நாளாகப் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 39,040 கன அடியிலிருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.31 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 92.62 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 46 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *