
இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளதாகவும், உலகில் காற்றாலை மின்னுற்பத்தில் இந்தியா நான்காமிடத்தில் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றதில் இருந்தே மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். 133ஆவது நிகழ்ச்சியாக அவர் இன்று வானொலியில் உரையாற்றினார்.
அப்போது கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் ஒன்று நம்மிடையே உள்ளதாகவும், அது இல்லாமல் போனால் நம்மால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது என்றும் தெரிவித்தார். காற்றின்மூலம் உருவாக்கப்படும் அந்த ஆற்றல் இந்தியாவை முன்னேற்ற உதவுவதாகத் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியில் அது புதிய வரலாற்றை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இப்போது இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளதாகவும், உலகில் காற்றாலை மின்னுற்பத்தில் இந்தியா நான்காமிடத்தில் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மே மாதத்தில் புத்த பௌர்ணமி நாள் வருவதாகல் அதையொட்டி நாட்டு மக்களுக்கு முன்கூட்டி வாழ்த்துத் தெரிவித்தார். பகவான் புத்தரின் போதனைகள் இன்றைக்கும் பொருந்தும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைதி நமக்குள் இருந்து தொடங்குவதாகவும், ஒருவர் தன்னை வெல்வதே மாபெரும் வெற்றி என்றும் புத்தர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் மூங்கில் தொழில்துறையில் ஏராளமான வெற்றிக் கதைகள் உள்ளதாகக் கூறிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மூங்கிலில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருளையாவது வாங்க வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார். மூங்கில் பொருட்களை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும், அது அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய வேலையாகும் என்றும், இது முழுவதும் எண்ம முறையில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த முறை கணக்கெடுப்புக்கான தகவல்களை நாமே உள்ளிடலாம் என்றும், கணக்கெடுப்பு அலுவலர் நம் வீட்டுக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன் இதற்கான வசதி செய்து தரப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.




