வேளாண்துறையில் விதைகளின் ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அதிக நிதியைச் செலவிட வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஆசிய விதை மாநாட்டின் தொடக்க விழா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநாட்டில் பேசிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் பல பயிர்களின் சராசரி விளைச்சல் மிகக் குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
வேளாண்துறையில் விதைகளின் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அதிக நிதியைச் செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நம் மண்ணின் வளத்தைப் பெரிதும் பாதித்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதேபோக்குத் தொடர்ந்தால் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை விளைவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க உயிரிச் செறிவூட்டப்பட்ட பயிர்வகைகளை உருவாக்கியுள்ளதாகவும், இவற்றில் பாதி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலில் வளர்க்கப்படுவதாகவும் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதத்துடன் தெரிவித்தார்.



