Saudi Arabia : பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் உயிரிழப்பு..!

சவூதி அரேபியாவில் பேருந்து லாரி மீது மோதித் தீப்பிடித்து எரிந்ததில் மக்காவில் இருந்து மதீனாவுக்குப் புனிதப் பயணம் செய்த ஐதராபாத்தைச் சேர்ந்த 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் சவூதி அரேபியாவுக்குப் புனிதப் பயணம் சென்றிருந்தனர்.

இவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர்.  இவர்கள் சென்ற பேருந்து டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியுள்ளது. நள்ளிரவில் நேர்ந்த இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்துள்ளது. இதில் பேருந்தில் இருந்த 11 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் மட்டுமே உயிர்தப்பியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்துக் குறித்துத் தில்லியில் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி செய்தியாளரிடம் பேசினார். அப்போது, இது குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடமும், ஐதராபாத்தைச் சேர்ந்த பயண முகமைகளிடமும் தான் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

உயிரிழந்தோரின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரவும், காயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கவும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *