PM Modi : தில்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Advertisements

79ஆவது விடுதலைநாளையொட்டித் தில்லி செங்கோட்டையில் உள்ள கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்து வணங்கினார். கோட்டைக் கொத்தளத்தில் உரையாற்றிய பிரதமர் நாட்டு விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் ஈந்ததையும், தங்கள் இளமைக் காலங்களைச் சிறையில் கழித்ததையும் நினைவுகூர்ந்தார்.
79ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு தில்லிச் செங்கோட்டைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி கொத்தளத்தில் உள்ள கொடிமரத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணங்கினார். பிரதமர் தேசியக் கொடியேற்றியபோது விமானப்படை ஹெலிகாப்டர்களிலிருந்து மலர்களைத் தூவினர்.

விடுதலை நாள் விழாவில் செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது இது 140 கோடி மக்களின் திருவிழா என்று குறிப்பிட்டார். கடந்த 75 ஆண்டுகளாகக அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். இயற்கைப் பேரிடர்க் காலத்தில் மீட்புப் பணியிலும் மறுவாழ்வுப் பணிகளிலும் மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் துணிந்து செயல்பட்ட வீரர்களுக்குத் தான் தலைவணங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிந்து ஆற்றுநீர் உடன்பாடு பாகிஸ்தானுக்கு வளந்தரும் வகையிலும், இந்திய நிலங்கள் தரிசாகும் வகையிலும் செய்யப்பட்டிருந்ததாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். இதனால் இந்திய உழவர்களுக்கு 70 ஆண்டுகளாகப் பேரிழப்பு ஏற்பட்டதாகவும் இப்போது சிந்தாற்றின் நீர் உரிமை இந்திய உழவர்களுக்குச் சொந்தமாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நம் நாட்டில் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் சந்தைக்கு வரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் ஈந்துள்ளதாகவும், தங்கள் இளமைக் காலங்களைச் சிறையில் கழித்துள்ளதாகவும், நாட்டின் அடிமைச் சங்கிலியை உடைக்கத் தங்கள் வாழ்வையே ஒப்படைத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *