
ரகசிய அரசாணை 674: முதல்வர் விஜய்யின் ‘நிழல்’ ஜெகதீஷ் நியமனம் மறைக்கப்பட்டது ஏன்? ஷாக் பின்னணி?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனி செயலராக ‘The Route’ நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவரின் நியமனம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மறைக்கப்பட்டு இப்போதுதான் வெளியே சொல்லப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘புதிய அரசியல், வெளிப்படையான நிர்வாகம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
ஆனால், ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே கோட்டை வட்டாரத்தில் இருந்து கசியத் தொடங்கியிருக்கும் ஒரு செய்தி, தவெக அரசின் ‘வெளிப்படைத்தன்மை’ மீதே பெரும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச்செயலராக (Private Secretary) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்ட விவகாரமும், அதுதொடர்பான அரசாணை திட்டமிட்டு மறைக்கப்பட்ட விபரமும் தான் இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக்!
அடுத்தடுத்த எண்கள்… வெளியான ஒன்று, மறைக்கப்பட்ட இன்னொன்று! தமிழக அரசின் பொதுத்துறையின் கோப்புகளில் இருந்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர வைக்கின்றன. முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட குழு மற்றும் சிறப்பு அதிகாரிகளின் நியமனங்கள் ஒரே தேதியில், அடுத்தடுத்த கோப்பு எண்களாகத் தான் தயார் செய்யப்பட்டுள்ளன.
அரசாணை எண் 674 (Office Proceedings No: 674): ஜெகதீஷ் பழனிசாமி (முதல்வரின் தனிச்செயலர் நியமனம்) அரசாணை எண் 675 (Office Proceedings No: 675): ரத்தன் பண்டித் (சிறப்பு அதிகாரி நியமனம்) வேடிக்கை என்னவென்றால், அரசாணை எண் 675-ன் படி ரத்தன் பண்டித் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட விபரம் அன்றைக்கே ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முந்தைய எண்ணான 674-ல் இருந்த ஜெகதீஷ் பழனிசாமியின் நியமன அரசாணை மட்டும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தளங்களிலோ அல்லது செய்திக்குறிப்புகளிலோ வெளியிடப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டது. 40 நாள் ரகசியமும்… வேறுவழியின்றி வந்த ட்விட்டர் பதிவும்!
ஜெகதீஷ் பழனிசாமி என்பவர் முதல்வர் விஜய்யின் நீண்டகால சினிமா மேனேஜர், தி ரூட் நிறுவனத்தின் நிறுவனர், ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களின் இணை தயாரிப்பாளர் மற்றும் தவெக-வின் டிஜிட்டல் பிம்பத்தை கட்டமைக்கும் பிஆர்ஓ (PRO). தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டெல்லி பயணம் உட்பட முதல்வரின் அனைத்து அரசு சார்ந்த உயர்மட்ட சந்திப்புகளிலும் ஜெகதீஷ் நிழல் போல உடனிருந்தார்.
எந்தவொரு அரசுப் பதவியும் இல்லாமல் அவர் எப்படி அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கேற்கலாம் என எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்..


