தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அணைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துப் போவதாலும், மலை, மண், மண் ஆகியன கொள்ளைபோவதாலும் பனைகள், மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதாலும் செழிப்பான நிலங்கள் வறண்டு பாலையாகி மக்கள் வாழத் தகுதியற்ற பாலையாகி விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள சாத்தையாறு அணை போதிய மழை பெய்யாததாலும், பல ஆண்டுகளாகச் சரியான பராமரிப்பு இல்லாததாலும் வறண்டுபோய்க் காணப்படுகிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் இடையே உள்ளது சிறுமலை, இந்த மலையில் தோன்றி வைகையில் கலக்கும் ஒரு துணையாறு சாத்தையாறு. இந்த ஆற்றில் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களுக்கு அருகே சாத்தையாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து 11 குளங்கள் பாசனம் பெறுகின்றன. மொத்தம் 4300 எக்டேர் பாசனப் பரப்பு உள்ளது.

அணை நிரம்பினால் வரும் மிகை நீர் மாட்டுத்தாவணி சம்பக்குளம் வழியாக வண்டியூர்க் குளத்துக்கு வந்து வைகையாற்றுடன் கலக்கிறது.26 அடி உயரமுள்ள சாத்தையாறு அணை கடந்த சில ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் வறண்டுபோய்க் கிடக்கிறது. சிறுமலை அடிவாரப் பகுதிகளில் ஆடு மாடுகள் மேய்ப்போர் அவற்றுக்குத் தண்ணீர் காட்டுவதற்குச் சாத்தையாறு அணைக்கு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் ஆடு மாடுகளுக்குக் கூடப் போதிய தண்ணீரின்றி அணையின் உட்புறமுள்ள நீர்தேக்கம் பாளம் பாளமாக வெடித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய செழிப்பான நிலங்கள் எல்லாம் பாலையாகி விடுமோ என்கிற அச்சம் உழவர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *