சென்னை:
சென்னை எழும்பூர், பெருமாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன். லோடு ஆட்டோ ஓட்டிவரும் இவர், தனது மகளின் கல்விச் செலவுக்கு உதவுமாறு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் வீரராகவனை செல்போனில் தொடர்பு கொண்டு, தனியார் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார்.
அதோடு உங்களது மகளின் மொத்த கல்விச் செலவையும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்குத் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி பல தவணைகளாக ஜிபே மூலம் ரூ.61,500 பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர், அவரது போன் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரராகவன் இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில், வீரராகவனிடம் நூதன முறையில் பணம் பறித்தது வேலூர் மாவட்டம், விருதம்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த தினேஷ் குமார் (35) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.