தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தல் உருவானதற்கான காரணம் மக்களுக்கு தெரியும் எனக் கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர், மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பதவி மற்றும் பணத்திற்காக கட்சி மாறியதாக அவர் கூறிய அந்த நபருக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவை விமர்சிக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய தவெக வேட்பாளருக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு, எதிர்காலத்தில் இதுபோன்ற கட்சி மாறுதல்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் கூறினார்.
’நான் ஓட்டு கேட்டு வரவில்லை ; அதிமுகவுக்கும் தொகுதி மக்களுக்கும் துரோகம் இழைத்ததற்கு நீதி கேட்டு வந்திருக்கிறேன் ’ என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



