இன்று கார்த்திகை அமாவாசை; காளிகாம்பாள் தரிசனம் செல்வ வளம் தரும்!

Advertisements

கார்த்திகை மாத அமாவாசை தினத்தில், சென்னை ஸ்ரீகாளிகாம்பாளை தரிசனம் செய்து பிரார்த்திப்போம். நம் கவலைகளைக் காணடித்து கண்ணீரைத் துடைத்தெடுப்பாள் தேவி காளிகாம்பாள்.

கார்த்திகை மாதம் வழிபாட்டுக்குரிய மாதம். எல்லா தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த மாதம். சிவா, விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளை வணங்கி வழிபடும் மாதம். அதேபோல், சக்தி என்று போற்றப்படுகிற தேவியர் அனைவரையும் வணங்கி வழிபடக்கூடிய மாதம்.

அமாவாசையில் நம் முன்னோர்களை வணங்க வேண்டும். பெளர்ணமியில் தெய்வங்களைத் தரிசிக்க வேண்டும். இந்த இரண்டு செயல்களுமே நமக்குள் நற்சிந்தனைகளையும் பேரருளையும் தந்து, அரணெனக் காக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத அமாவாசை தினத்தில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அதேபோல, புற்றுக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு இருக்கும் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும்.

இந்த அமாவாசை நாளில் உக்கிர தேவியாகத் திகழும் தேவி, சாந்த ஸ்வரூபினியாக எங்கெல்லாம் அமர்ந்து ஆட்சி செய்கிறாளோ… அந்த ஆலயங்களுக்குச் சென்று, தரிசித்து வந்தால், நம் புத்தியைத் தெளிவாக்குவாள்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் கோயில். காளிகாம்பாள் என்றாலே உக்கிரத்துடன் இருக்கிற தெய்வம், இங்கே இந்தக் கோயிலில் கருணை ததும்பக் காட்சி தருகிறாள். சாந்தமே உருவெனக் கொண்டு அழகே உருவெனக் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

காளிகாம்பாள் கோயில், ஸ்ரீசக்ர ஆதிக்கம் நிறைந்த திருக்கோயில். மராட்டிய மன்னன் சிவாஜி, வடக்கிலிருந்து இங்கே வந்த தருணத்தில் காளிகாம்பாளை வணங்கி வழிபட்டு, ஆபரணங்கள் அளித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

கார்த்திகை அமாவாசையான இன்று, காளிகாம்பாளை தரிசிப்போம். நம் வாழ்வில் இதுவரையிலான தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவாள். சாந்த சொரூபியாகத் திகழும் காளிகாம்பாளையும் உக்கிர ரூபத்துடன் காட்சி தரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியையும் மனதார வழிபடுவோம். முடிந்தால் செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்வோம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *