
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15- ஆம் தேதி டில்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, சிறு குறு தொழில் செய்வோருக்கான விஸ்வகர்மா யோஜனா திட்டம் செப்டம்பர் மாதத்தில் அமல் படுத்தப்படும் என்று அறிவித்தார்.அதன்படி, செப்டெம்பர் 17-ஆம் தேதியன்று இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் படி கைவினை கலைஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
பி. எம். விஸ்வகர்மா திட்டத்தின் படி இந்தத் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை கிடைக்கும். மேலும், முதல் தவணையாக ரூ.1 லட்சம்வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிறகு 2-ம் தவணையாக ரூ. 2 லட்சம்வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், கொத்தனார், கயிறுச் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர் உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் இந்தத் திட்டத்தில் நிதி உதவி பெறலாம்.சுமார் 5 லட்சம் குடும்பங்கள் முதல் 5 ஆண்டிலும், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 17-ம் தேதி ‘விஸ்வகர்மா தினத்தில்’ தொடங்கி வைக்கிறார். .
கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு மற்றும் அதிக அளவில் பொருட்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை மேம்படுத்துவது மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் கைவினைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் பிரதமர் கொண்டு வந்துள்ள பிரதமர் ஜல் ஜீவன் திட்டம், கிசான் சம்மன் நிதி யோஜனா, ஆயுஸ்மான் பாரத் யோஜனா, கால்நடைத் திட்டம் முதன்மையானவை. இதன் படி அவரவர்கள் செய்யும் தொழிலை நல்ல முறையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். நாட்டில் சிறு தொழிலை மேம்படுத்திக் கொள்ள முடியும்.செப்டெம்பர் 17, 2023 அன்று விச்வகர்மாவின் பிறந்த நாளன்று இத்திட்டம் ஆன்லைனில் தொடங்கப்படும். இதற்காக 13000 முதல் 15000 கோடிவரை பயனாளிகளுக்கு வழங்ப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினிம் இத்திட்டம்குறித்து எதிர்மறையான விமர்சனங்களும், கருத்துக்ககளும் எழுந்துள்ளது. அதாவது இத்திட்டம் மறைமுகமாகக் குலத் தொழிலை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும், ராஜாஜியின் திட்டம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் செயல்படுத்தும் முயற்சியாக இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது.
இதனிடையே விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, இத்திட்டம் சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை பெற தமிழக அரசு விரும்புகிறது.
இதற்காக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு அமைத்துள்ளது.
இந்தக்குழுவில், தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குழு ஒருங்கிணைப்பாளராகத் தொழில் துறை செயலர் அருண்ராய் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் எப்படியான தாக்கத்தை உண்டு பண்ணும் ஏன்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




