
காஸாவில் தொடங்கிய போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிய நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் காஸாவில் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்தார்.
இதில், சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இஸ்ரேலும், கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் காஸா மக்களை விடுவிக்க ஒப்புக்கொண்டு அதன் முதல் கட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக, ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பார் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஸாவில் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது என குறிப்பிடத்தக்கது.





