
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களைச் சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிப்ரவரி 5ஆம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாகத் தனது வேட்பாளரை அறிவித்தது.
சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவரை எதிர்த்துத் தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் எனச் சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
