
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்பட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏல உரிமை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் எனப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாகக் கடந்த சில மாதங்களாகத் தொடர் போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. டங்ஸ்டன் சுரங்க திட்டப் போராட்டத்திற்கு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. கடந்த மாதம் மேலூரில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்தது.
இருப்பினும் மத்திய அரசு தற்போது வரை டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை ரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகக் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களைத் தற்போது வரை நடத்தி வருகின்றனர்.
அதன்படி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் இன்று விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி 4 வழிச்சாலையில் நடைப்பயணமாகப் பேரணியாகச் சென்று மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




