
கருணாநிதி காலத்திலேயே திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது என்றும், இப்போதும் வரப்போவது கிடையாது என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தமிழ்நாட்டைக் கிரிக்கெட் போட்டியில் கூடத் தில்லி அணியால் வெல்ல முடியாது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளும் ஆறுகளில் மணலைச் சுரண்டி அள்ளியதாலும், மலைகளை உடைத்துக் கற்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதாலும் தண்ணீரின்றி வறண்டுபோகும் அபாயம் உள்ளதாக விஜய் தெரிவித்தார்.
திமுக வரலாற்றிலேயே தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றதே இல்லை என்றும், கருணாநிதியாலேயே அது முடியவில்லை என்றும், இப்போதும் முடியாது என்றும் விஜய் தெரிவித்தார்.
நான்குநேரியில் சாதிவெறியர்கள் செய்த படுகொலைகள் பற்றிப் பேசிய விஜய், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பார்த்துச் சந்தி சிரிப்பதாகக் குறிப்பிட்டார்.




