
திருச்சிராப்பள்ளிக் கோட்ட ரயில்வே அலுவலக வாயிலில் இந்தியில் பெயர் எழுதி வைத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்பு வெறியில் மத்திய பாஜக அரசுஎல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான செயலில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளிக் கோட்ட இரயில்வே அலுவலக நுழைவாயிலில் ‘கர்த்தவ்ய துவார்’ என எழுதி வைத்துள்ளதையும், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்று எழுதிவைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரையே ஆங்கிலத்தில் எழுதியுள்ளதையும், மத்திய நீர்வள அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.



