
1967, 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என்றும், புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடுக்கத்தினாலேயே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான தமிழக வெற்றிக் கழகம் எதிலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.


