ஈழத்தமிழருக்காக நாடாளுமன்றத்தில் 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்த முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2019ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் இந்த மழைக்காலக் கூட்டத்தொடருடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், தன்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பிய கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.
ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், தமிழ் ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.




